காஞ்சிபுரத்தில் வீடுகள் கொஞ்சம் நீளமாகவே இருக்கும். நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். மாடியில் இரண்டும் கீழே நான்கும் என குடியிருந்தோம். மொத்தம் பத்து வாசற்கட்டுகளை கடந்தால் தான் தோட்டம் வரும். முதல் இரண்டு வாசல்களுக்கு இடையில் சிறு வராண்டாக்கள் இருக்கும். இங்கே தான் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருப்போம். இரண்டாவது வாசற்படியில் உள்ள கதவை சாத்துவது சற்றே கடினம். மிகப் பெரிய தேக்கு மரத்தினாலான கதவு அது. கலை நயமிக்க வேலைப்பாடுகள் அமைந்த அந்த கதவின் இரு புறமும் விளக்கு வைக்க மாடங்கள் உண்டு. மார்கழி மாதத்தில் நாள் தவறாமல் காலையும் மாலையும் விளக்கு வைக்க சொல்வாள் செட்டியாரம்மா. கார்த்திகை மாதத்தில் மாலை மட்டும் விளக்கு வைக்க சொல்வாள். கதவிற்கு மேல கண்ணாடி போட்ட கஜலக்ஷ்மி படமும் அதற்கும் சற்று மேல சங்கு, திருநாமம், சக்கரம் கொண்ட படமும் பதிக்கப்பட்டு இருக்கும். தினமும் காலையில் செட்டியார் இங்கு வரை வந்து ஊதுவத்தி காட்டுவது வழக்கம். மூன்றாவது வாசலை ஒட்டி ஒரு சிறு தாழ்வாரம் இருக்கும். சற்றே பெரிதான டிவீஎஸ் போன்ற வண்டிகளை நிறுத்துவதற்கான இடம் அது.
மூன்றாவது மற்றும் நான்காவது வாசல்களுக்கு இடையே ஒரு பெரிய முற்றம். விதானம் உயர்த்தப்பட்டு சுற்றிலும் ஜன்னல்கள் வைத்து தேக்குமர வேலைப்பாடுகளுடன் பார்க்கவே அற்புதமாய் இருக்கும். ஜன்னல்களுக்கு சற்றே கீழே உட்கார்ந்தவாறு காந்தி சிரித்தபடி நூல் ராட்டை சுற்றி கொண்டிருப்பார். விடுதலைக்கு முந்திய சந்ததியினர் இருக்கும் பெரும்பான்மையான வீடுகளில் காந்தி இன்றும் புகைப்படத்திலாவது இருக்கிறார் என்பது ஆறுதல்.காந்தி ஜெயந்தியின் போது செட்டியார் யாரைக் கொண்டாவது அந்த புகைப்படத்தை துடைத்து பஞ்சினால் தானே திரித்த ஒரு பெரிய மாலையை அதற்கு அணிவிக்க வைப்பார்.
அட சொல்ல மறந்துட்டேனே. இங்கே தான் அழகான ஊஞ்சல் ஒன்றும் இருக்கும். இந்த ஊஞ்சலில் ஆடுவதற்கு இந்த வீட்டில் குடி இருக்கும் அத்தனை பேரும் விருப்பப்படுவார்கள். அதுவும் செட்டியாரும் செட்டியாரம்மாவும் இல்லாத நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். உயர்ந்த விதானத்தில் இருந்து பத்தடி கிழிறக்கி ஒரு மின்விசிறி உண்டு. காற்று வருவதற்கு ஏதுவாக அமைக்கப் பட்டது. அதை ஊஞ்சலில் உட்கார்ந்தபடி கைகளால் தொட்டு விடும் அளவுக்கு ஆடுவோம். தேக்கு மரத்தினாலான இந்த ஊஞ்சல் மிகவும் அழகானது. நன்றாக செதுக்கப்பட்டு வார்னிஷ் அடித்து வைத்திருப்பார்கள். இரும்பு சங்கிலிகள் கொண்டு கீழ் முற்றத்தின் கட்டை ஒன்றில் தொங்கவிட்டிருப்பார்கள். சங்கிலிகளின் முடிவில் மணிகள் கட்டப்பட்டிருக்கும். யாரும் ஊஞ்சலில் வந்தமர்ந்தாலே ஒலி எழுப்பும். புதிதாக வீட்டிற்கு வருபவர்கள் தெரியாமல் ஊஞ்சலை லேசாக இடித்தவாறு சென்றால் உடனே செட்டியாரம்மா முற்றத்தின் இடப்பக்கத்தில் இருக்கும் சமையற்கட்டில் இருந்து கொண்டே யாரது என்று குரல் கொடுப்பாள்.
மற்ற வாசல்களையும் வேகமாக கடந்து நேராக தோட்டத்தின் கதவை திறந்தேன்.மனதில் கோபம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அப்படியென்ன கேட்டு விட்டேன் நான். இருந்தாலும் நந்தினிக்கு கொஞ்சம் திமிரு தான் என்று எண்ணிக்கொண்டே கதவை லேசாக சாற்றி விட்டு தோட்டத்திற்குள் நுழைந்தேன். யார் வேண்டுமானால் எப்போதும் வரலாம் என்பதால் தான் இந்த எச்சரிக்கை. சிலருக்கு படிக்கும் போது பாட்டு கேட்பது, தலையை உலைப்பது, நகங்களை கடிப்பது போல எனக்கு படிக்கும் போது தோட்டத்தில் அணிலோ, கிளிகளோ, மைனாக்களோ அல்லது சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகளோ கத்திக் கொண்டிருந்தால் நன்றாக இருப்பதாக தோன்றும். பெரும்பான்மையான என் பொழுதுகள் இந்த தோட்டத்தில் தான் கழியும். மனதிற்கு மிகவும் நெருக்கமான இடம் இது. நான் எப்போது கோபம் கொண்டாலும் தோட்டத்தில் சிறிது நேரம் இருந்தால் கொஞ்சம் அமைதி ஆகிவிடுவது வழக்கம்.
தோட்டம் சிறிது தான் என்றாலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு இடம் உண்டு. பவுண்டரி லைன் தான் கொஞ்சம் கிட்டக்கவே இருக்கும். நேராக பின் மதில் சுவரில் பட்டால் சிக்ஸ். ஒரு முறை தரையில் அடித்தோ அல்லது உருண்டோ சென்று சுவரில் பட்டால் ஃபோர். தோட்டம் என்றால் பூச்செடிகளும் மரங்களும் இல்லாமல் இருக்குமா என்ன? முன்னாடியே நிற்கும் முருங்கை மரத்திலோ அல்லது வாழை மரத்திலோ அல்லது டிசம்பர் பூச்செடியிலோ பட்டால் ஜி1. அடுக்கு மல்லி அல்லது செம்பருத்தி பூச்செடியிலோ தென்னை அல்லது எலுமிச்சை மரத்திலோ பட்டு நின்றால் ஜி2. சில மாலை வேளைகளில் நேரம் தெரியாமல் விளையாடுவோம். அப்போதெல்லாம் இந்த அடுக்கு மல்லியின் வாசம் தான் எங்களுக்கு மணியாகிவிட்டதை சொல்லும். அதன் வாசம் ஆளையே தூக்கும். மொத்தமாய் ஃ எழுத்தை போல மூன்று கும்பல்களாக அடுக்கு மல்லி செடிகள் அடர்ந்திருக்கும். அந்த பூக்களை பறிப்பதற்கு குடியிருப்பவர்களிடையே போட்டாப்போட்டி நிலவும்.
எலுமிச்சை மரம் அடுக்குமல்லிகளின் முடிவில் சற்றே வலதுபுறம் கிளை பரப்பி நிற்கும். அதிலிருந்து இரண்டடி தூரத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னை மரம். தென்னை மரத்திற்கு அப்பால் நான்கடி தூரத்தில் பின் மதில் சுவர். எங்கள் பவுண்டரி லைன். எனது பெரிய அண்ணன் சில சமயம் சுவரை தொடமால் நின்று சிக்ஸ் செல்லும் பந்துகளை லாவகமாக பிடித்து விடுவான். அவன் பவுண்டரி லைனில் நின்றால் நாங்கள் அடிப்பது வெறும் ஜி1 இல்லை என்றால் ஜி2 தான். தென்னை மரத்திற்கும் பின் மதில் சுவருக்கும் இடையே பெயர் தெரியாத நிறைய செடிகொடிகள் அடர்ந்து கிடக்கும். முசுமுசு கொடி, கோவை கொடி, ஒரு வகையான பருப்புக்கீரை, மஞ்சள் பூப்பூக்கும் ஒரு கொடி, ஊதா நிறத்தில் பூப்பூக்கும் ஒரு செடி என நிறைய உண்டு.
ஈசிச்சேர் எடுத்துக்கொண்டு போய் எலுமிச்சை மரத்தின் அடியில் போட்டேன். அதில் சாய்ந்து கொண்டு நீலவானத்தில் நகர்ந்து செல்லும் மேகங்களை பார்த்தபடி இருந்தேன். மனதில் எண்ணவோட்டங்கள் ஆரம்பித்தன. எங்கெங்கோ எண்ணம் போயும் வந்தும் கொண்டிருந்தது. "ஒன்னு தானே கேட்டேன் அவகிட்டே அதுக்கு ஏன் இப்படி" - சமாதானம் செய்ய முயற்சித்து நானே தோற்று கொண்டிருந்தேன். கோபத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தோட ஆரம்பித்திருந்தது.
பக்கத்து வீட்டில் இருக்கும் கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு ஒரு பழத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. எலுமிச்சை மரத்தின் இன்னொரு முனையில் இருந்து அணில் ஒன்று கிரீச் கிரீச் என்று கத்தி கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் நான் எழுந்திருக்க கூடும் என்று தென்னை மரத்திற்கு தாவ ஏதுவாக அமர்ந்து கொண்டு வாலை தூக்கித் தூக்கி கத்திக் கொண்டிருந்தது. மதில் சுவரின் பின்னால் இருக்கும் சத்திரத்தின் சுவரில் பூனை ஒன்று போய்க்கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் பக்கத்து வீட்டின் கடைசியில் இருக்கும் வேப்பமரத்தில் இருந்து கொண்டு இந்த தவிட்டுக்குருவிகள் இத்தனை கூப்பாடு போடாது. தோட்டத்தின் இரு புற சுவர்களின் நடுவே துணி காயப்போடும் கொடி கம்பிகள் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் யாரும் வரலாம் என்ற எச்சரிக்கையோடு தனிச்சையாக கைகள் கண்ணீரை துடைத்தபடி இருந்தன.
"சொத்" என்ற சப்தம் கேட்டதும் தான் மீண்டும் தோட்டத்திற்கு வந்தேன். ஒரு வேளை குரங்கு தான் தென்னை மரத்தில் இருந்து எதையும் போடுகிறதோ என்று யோசித்தேன். நல்லவேளை இல்லை. ஒரு பழுத்த எலுமிச்சை தான் சற்று தூரத்தில் விழுந்திருந்தது. வாரத்தில் நான்கு நாட்களாவது குரங்கு பட்டாளம் வந்து விடும். வாழை மரங்களின் குருத்தையும் இளநீரையும் ஒரு கை பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு வேப்பமர நிழலிலோ சத்திரத்தின் உயர்நிலை தண்ணீர் தொட்டியின் கீழோ இளைப்பாறிவிட்டு செல்லும். சில சமயங்களில் வீட்டிற்குள்ளும் வந்து விடுவதுண்டு.
அடர்த்தியான எலுமிச்சை இலைகளையும் தாண்டி ஆங்காங்கே சூரியன் என்னை சுட்டுக்கொண்டிருந்தது. அதுவரை சுட்டதாக தெரியவில்லையே என்று யோசித்தபடி இருந்தேன். கன்னங்களில் கண்ணீர் காய்ந்து கறையாகி இருந்தது. ஈசிச்சேரில் இருந்து எழுந்து அதை மடித்து வைத்தேன். பாரம் குறைந்தது போல் இருந்தது. மெதுவாக குழாயடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அழுதது தெரியாமல் இருக்க கை, கால், முகம் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன். தோட்டக்கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தேன்.
வலது புறம் கிணறும் கீழே குடியிருக்கும் வீடுகளின் நீர் பயன்பாட்டிற்கான தொட்டியும் உண்டு. இடது புறம் வரிசையாக குளியலறைகள். ஒரு காலத்தில் பட்டு நெசவுக்காக சாயமேற்ற கட்டப்பட்ட சின்ன சின்ன தொட்டிகளும், மாட்டுகொட்டகைக்கு ஏற்ப இரும்பு வளையங்களும் அங்கங்கே இருக்கும். கிணற்றில் நீர் இருந்தாலும் இறைப்பது கிடையாது. போர் போட்டு மோட்டார் வைத்து தான் கீழே உள்ள தொட்டிக்கும், மேலே இருக்கும் விடுகளின் நீர் பயன்பாட்டிற்கான மேல்தொட்டிக்கும் தண்ணீர் ஏற்றுவார்கள். மோட்டார் போடும் சுவிட்ச் எங்கள் வீட்டின் எதிரில் தான் இருக்கும்.
சில சமயம் ஐஸ் பாய் விளையாடும் போது கிணற்றுக்குள் அல்லது தொட்டிக்குள் கூட ஒளிந்து கொள்வதுண்டு. கீழே இருந்த குடித்தனங்களில் எட்டு பேர் நாங்கள் ஐஸ் பாய் விளையாடுவோம். பொடிசுகளை ஒப்புக்கு சப்பான் என்று சொல்லி கண்ணை மூடி கொள்பவரின் பின்னாலே நிறுத்தி விடுவோம். தோட்டத்தில் இருந்து உள்ளே வந்த பிறகு முகம் கழுவி ஏழு மணி வரை படிப்பது போல் இருந்து விட்டு ஐஸ் பாய் விளையாட ஆரம்பிப்போம். எட்டரை மணிக்கு செய்திகள் போடும் போது தான் சாப்பிட போவதாக விளையாட்டை நிறுத்துவோம். ஏழாவது கட்டில் இருந்து தோட்டத்தின் கதவு வரை தகரம் வேய்ந்த இரண்டு குடித்தனங்கள் தான். கொஞ்சம் இருட்டாக இருக்கும். எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். சில சமயம் தகரத்தின் மீது கூட ஏறிக்கொள்வோம்.
தகரத்தின் மீது ஏற ஏதுவாக குளியலறைகளை ஒட்டி இரண்டடி முன்னால் சிறு திண்ணையும் அதையொட்டி துளசி மாடமும் இருக்கும். தினமும் காலையில் செட்டியாரம்மா வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி பூஜை சாமான்களுடன் துளசி மாடத்திற்கு வருவாள். பூஜை முடிந்து எங்கள் வீட்டு வாசலை கடக்கும் போது நெய்வேத்தியத்திற்கு கொண்டு வந்த கற்கண்டையோ, பேரீச்சம் பழத்தையோ அல்லது குல்கந்தையோ (ரோஜா இதழ், தேன், கற்கண்டு கலந்து தயாரிக்கப்படுவது - எனக்கு தெரிந்தவரை) என்னைக் கூப்பிட்டு கொடுத்து விட்டு செல்வாள்.
இன்னமும் என் மனது நந்தினி சொன்ன வார்த்தைகளையே அசைப் போட்டுக்கொண்டிருந்தது. அத்தனை எளிதாக எப்படி அவளால் சொல்லிவிட முடிந்தது என்று யோசித்து யோசித்து களைத்துப் போனேன். இருந்தாலும் நான் அவளிடம் கேட்டிருக்க கூடாதோ என்றும் மறுபுறம் தோன்றியது. ஆசை உள்ளவர்கள் யாரும் கேட்பது தானே என்று எனக்கு நானே சமாதானம் அடைய முயற்சித்தேன்.
1 comment:
You're naration about the house is tooo good and realistic. I felt like i lived few moments in my grandparents house.
Post a Comment