Wednesday, October 14, 2009

வீடும் காதலும் - 2

முதல் பாகம் படிக்க இங்கே செல்லவும் - வீடும் காதலும் - 1



கடைசி இரண்டு குடித்தனங்கள் ஏழாவது வாசலுக்கு பிறகு இருக்கும். இந்த வீடுகளின் எதிரே மூன்று தூண்கள் நிற்கும். ஒரு தூணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே பத்தடி இடைவெளி இருக்கும். மேலிருக்கும் தகரத்தை தாங்குவதற்கு தான் இந்த தூண்கள் என்றாலும், தூண்களை சுற்றி விளையாடுவது எப்போதும் எங்களுக்கு பிடித்தமானது. இப்போதெல்லாம் தூண்கள் வைத்து யாரும் வீடு கட்டுவதாக தெரியவில்லை. ஒன்று கவனித்திருக்கிறேன் - தூண்கள் இருக்கும் வீடுகளில் குழந்தைகளின் குதூகலம் நிறைந்து இருக்கும். மாநகரங்களில் இருந்து ஆண்டு விடுமுறைக்கு ஒரே ஒரு முறை வரும் குழந்தைகள் கூட தூண்களை கண்டால் உடனே மகிழ்ச்சியுடன் விளையாட தயாராகி விடுவார்கள். தூண்கள் நமது எண்ணத்திற்கு ஏற்றாற் போன்று மாறும் தன்மையுடையவை என்று எனக்கு தோன்றுவது உண்டு. தனிமையில் தூண்களை பிடித்துக் கொண்டு யாரை நினைக்கிறோமோ அவர்களாகவே மாறும் தன்மை மனதிற்கு ஒரு வித மயக்கத்தை தருபவை. சில சமயங்களில் சற்று அபாயமானதும் கூட. என்னைப் பொறுத்த வரையில் மனதிற்கு நெருக்கமான நண்பர்களை போலத்தான் இந்த தூண்களும்.

எனக்கும் இந்த தூண்களுக்கும் இடையிலான உறவு அற்புதமானது. இன்றளவும் என் இடது நெற்றியில் காணப்படும் வடு இந்த தூண்களில் ஒன்றினால் ஏற்பட்டது தான். காயத்தின் காரணம் என்னுள் லேசான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது உண்டு. நந்தினியிடம் கூட அந்த காரணத்தை சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தாள். நினைவு தெரியாத வயதில் இந்த வீட்டில் ஒரு குடும்பம் ஆந்திராவில் இருந்து வந்து குடியிருந்திருக்கிறது. அந்த குடும்பத்திலும் என் வயதையொத்த சிறுமி இருந்திருக்கிறாள். அவளை முத்தமிட துரத்தி சென்று தூணில் மோதிய போது ஏற்பட்டது தான் என் நெற்றியில் இன்னும் இருக்கும் விழுப்புண் என்று அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.

தூண்களை பார்த்த பிறகு எனது மனவருத்தம் கூடிப்போனது. எங்கள் வீடு ஆறாவது மற்றும் ஏழாவது வாசலுக்கு இடையே அமைந்தது. எங்கள் குடித்தனம் இரண்டு அறைகள் கொண்டது. இரண்டு அறைகளுமே பத்தடி அகலமும், எட்டடி நீளமும் கொண்டவை தான். இந்த மிகச் சிறிய அறைகளில் தான் முதலில் ஐவரும் அப்பாவின் மறைவிற்கு பிறகு நால்வரும் காலம் தள்ளினோம். இரண்டு அறைகளையும் இணைப்பது ஒரு நடை மட்டுமே. நடையில் நன்றாக காற்று வரும். பின்னே உள்ள தோட்டத்திற்கும் குடித்தனங்களுக்கு செல்ல இந்த நடை ஒரே வழி என்பதால் அம்மா மதிய நேரத்தில் மட்டும் மின்சாரம் சேமிக்கும் பொருட்டு நடையில் படுத்து கொள்வதுண்டு. இரவில் சில சமயங்களில் தூக்கம் பிடிக்க வில்லை என்றால் அம்மாவும் நானும் நடையில் சென்று உறங்குவோம் அல்லது மாடிக்கு சென்று விடுவோம்.

சத்தம் கேட்காமல் நடையை தாண்டி மாடி செல்லும் படிகட்டுகளை அடைந்தேன். நந்தினி ஒரு போதும் இப்படி நடந்து கொள்பவள் இல்லை. அவள் அப்படி நடந்து கொள்ள நிச்சயம் ஏதேனும் காரணம் இருக்கும் என்று எண்ணியபடியே மாடிக்கு சென்றேன். முன்பு ஒரு முறை சைக்கிளில் அவளை வைத்து ஒரே ஒரு ரவுண்ட் அடிக்க வேண்டும் என்று சொன்ன போதும் நிறைய காரணங்கள் சொன்னாள். பிறகு அவளே ஒரு நாள் நான் எதிர்பாராத சமயத்தில் எனது சைக்கிளில் வந்து ஆச்சரியப்படுத்தினாள்.அதே போல இந்த முறையும் நடக்காதா என்று ஏங்க ஆரம்பித்தேன்.

மாடிக்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்று வீட்டின் உள்ளிருந்து செல்வதற்கும் மற்றொன்று வீட்டின் வெளியிலிருந்தே செல்வதற்கும் அமைக்கப்பட்டவை. உள்ளிருந்து செல்லும் வழியில் சென்றால் மாடியில் இருக்கும் இரண்டாவது குடித்தனத்திற்கே நேரே சென்று விடலாம். வெளியில் இருந்து செல்லும் வழியில் சென்றால் பால்கனி, விதானத்தின் ஜன்னல்கள், முதல் குடித்தனம் இவற்றை கடந்து தான் இரண்டாவது குடித்தனத்திற்கு வரவேண்டும். பால்கனியில் இருந்து பார்த்தால் வடக்கே காமாட்சி அம்மன் கோவிலும், வடமேற்கில் ஏகாம்பரேசுவரர் கோவிலும் தெரியும். பக்கத்து வீட்டு சுவரின் உதவியுடன் இரண்டாவது குடித்தனத்தின் தளத்தின் மீது ஏறினால் தான் கிழக்கில் இருக்கும் வரதராஜப்பெருமாள் கோவில் தெரியும்.

காஞ்சிபுரத்தில் உற்சவம் இல்லாத மாதங்களை தான் சீக்கிரம் எண்ணி விட முடியும். சித்திரையில் வரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், மாசியில் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோத்சவம், பங்குனியில் ஏகாம்பரேசுவரர் கோவில் பிரம்மோத்சவம் என ஊரே ஒவ்வொரு மாதமும் களைகட்டும். வரதராஜப்பெருமாள் மட்டும் நாங்கள் இருந்த காமராஜர் வீதி வழியே பத்து நாட்களும் காலையில் ஒரு வாகனத்திலும் மாலையில் ஒரு வாகனத்திலும் செல்வார். மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் தேர்த் திருவிழாவும் கூட்டம் ரொம்பி வழியும். தேரன்று மாடியில் நின்று கொண்டு தெற்கே மூங்கில் மண்டபத்தில் தேர் எங்கள் தெருவில் திரும்பும் முன்னரே அனைவரும் ஒன்று சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்து விடுவோம்.

மாடியின் இரண்டாவது குடித்தனத்தில் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் இருந்தது. எங்களுக்கும் முன்பாகவே அந்த குடும்பம் செட்டியார் வீட்டில் குடியேறியது என்று அம்மா சொல்வாள். அந்த குடும்பத்தின் மங்கையர்க்கரசி பாட்டி கதை சொல்லியபடி அவளுடைய பேரப் பிள்ளைகளுக்கும், எனக்கும், என் இரு சகோதரர்களுக்கும் பௌர்ணமி இரவுகளில் உருண்டை சாதம் கொடுப்பாள்.சித்திரை மாதத்தில் மாலை நேரங்களில் பால்கனியில் தண்ணீர் ஊற்றி விடுவார்கள்.சித்திரை மாத நித்தி்ரைகள் யாவும் வானத்தில் நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்தபடியே கழியும்.

சித்திரையில் வரும் பௌர்ணமியன்று வரதராஜப்பெருமாள் பாலாற்றில் இறங்குவது கள்ளழகர் வைகையில் இறங்குவது போல விசேஷமானது. சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் அந்த விழா நடப்பாவி உத்சவம் என்று அழைக்கப் படுகிறது. ஊரில் இருக்கும் மக்கள் யாவரும் வித விதமான உணவுகளை தயாரித்து கொண்டு மாலை நடந்து சென்று பாலாற்றில் அமர்ந்து குடும்பம் குடும்பமாக மகிழ்ச்சியாக உண்டு விட்டு திரும்புவார்கள். எங்களைப் போல குடித்தனங்களில் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமி அன்று ஆளுக்கு ஒரு வகையான சாதம் தயாரித்து கொண்டு வருவோம். எடுத்து செல்லும் உணவு வகைகள் ஒற்றைப் படையில் இருக்க வேண்டும் என்று செட்டியாரம்மா சொல்வாள். செட்டியாரம்மாவோ செட்டியாரோ இது வரை நடப்பாவிற்கு வந்தது இல்லை. இருந்தாலும் செட்டியாரம்மா செய்து தரும் ஓட்டை வடையும் நெய் பொங்கலும் எங்களுடன் வருடம் தவறாமல் வந்துவிடும். என் அம்மா ஸ்பெஷல் பருப்பு வடையும் புளியோதரையும். மேல் வீட்டில் இருக்கும் பாட்டி மாங்காய் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என்று கொண்டு வருவாள்.

[இப்போ இந்த கதையில வர நந்தினி என் காதலி இல்லை, பக்கத்து வீட்டு சின்ன பொன்னு தான்னு சொன்னா நம்பிடவா போறீங்க.]

மாடியில் இருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக் கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் விவேகானந்தர் நூலகம் சென்றேன். நந்தினியை அங்கே வைத்து தான் முதலில் சந்தித்தது. உள்ளே நுழைந்ததுமே ஆச்சரியம் காத்திருந்தது. நந்தினியின் தோழி கல்யாணி "நந்தினி உனக்காக வரலாற்று நாவல்கள் இருக்கிற இடத்துல காத்துக்கிட்டு இருக்கா" என்று சொல்லிப் போனாள்.நூலகத்தின் மாடியில் ஒரமாக இருக்கும் வரலாற்று நாவல்கள் பகுதி. பேச வேண்டுமானால் அந்த இடம் தான் சரியாக இருக்கும். போனதும் கிடைத்தது நான் கேட்ட ஒற்றை முத்தம். அதிர்ச்சி தான் என்றாலும் மனம் ஆனந்த தாண்டவம் ஆடியது. என் கையில் ஒரு சிகப்பு ரோஜாவை திணித்து விட்டு வெட்கத்தை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவள் ஒடியே போனாள். முத்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்து போய் இருந்தது.

வழக்கம் போல சைக்கிளை இரண்டாவது வாசலில் நிறுத்தி விட்டு ஊஞ்சலை இடித்த படி ஒவ்வொரு வாசலாக கடந்து சென்று கொண்டே இருந்தேன். தூண்களை தொடுகையில் நந்தினியின் ஸ்பரிசம் உணர்ந்தேன். நேரே தோட்டத்திற்கு சென்றேன். பக்கத்து வீட்டு கொடுக்காப்புளி மரத்தில் கிளிகள் இரண்டு சிறகுகள் கோதிக் கொண்டிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் இரண்டு அங்கும் இங்கும் காற்றில் அலைந்தபடி இருந்தது. தும்பிகள் புற்களின் மேல் தவமிருந்தன. மல்லிகை மொட்டுக்கள் பூப்பதற்கு நிலவின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன. தேவலோகம் போல தோட்டம் எனக்குள் உருமாறிக் கொண்டிருந்தது. நானுன் என்னுடன் நந்தினியும் வான வீதியில் நடந்து கொண்டிருந்தோம் - பூலோகத்தில் இருக்கும் சொர்க்கத்தை(வீட்டை) பார்த்தபடி.

No comments: