Wednesday, October 21, 2009

மௌனமாய் ஒரு மழைக்காலம்

ஜன்னலின் ஓரம் அமர்ந்து கண்ணாடியில் மழை போட்டுக் கொண்டு இருக்கும் நீர்க்கோலங்களை பார்த்தபடி இருந்தேன். எங்கிருந்தோ வரும் துளி ஒன்று, சிதறிக் கிடக்கும் நீர்த் துளிகளை ஒன்று சேர்த்தபடி கண்ணாடியில் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தது. மழையை ரசிக்க கற்று கொடுத்தவள் கூட அவள் தான். அவளுக்கு மழை ரொம்பவும் பிடிக்கும், என்னை நனைக்காத போது மட்டும். தனியில் இருந்தால் மழையில் ஆனந்தமாய் நனைவாள். நான் உடன் இருந்தால் "இந்த மழைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை" என்று மழையை கடிந்து கொள்வாள். எப்படி இவளால் மட்டும் அன்போடும் வாஞ்சையோடும் எப்போதும் இருக்க முடிகிறது என்று யோசித்தபடி, மழையாய் வழியும் அவள் நினைவுகளில் நனைந்து கொண்டு இருந்தேன். தேநீர் மணம் சட்டென்று நினைவுகளில் இருந்து என்னை மீளச் செய்தது.

என் கைகளில் ஏலக்காய் போட்ட தேனீர் கோப்பையைக் கொடுத்து விட்டு என் எதிரினில் அமர்ந்து கொண்டாள். அவளும் ஜன்னலின் வழியே மழையை பார்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தீவிரமான முகபாவம் அவள் மழையை ரசிக்கிறாளா இல்லை என்னைப் போலவே மழையால் தூண்டப்பட்ட வேறு ஏதேனும் நினைவுகளில் மூழ்கி இருக்கிறாளா என்று என்னை யோசிக்க வைத்தபடி இருந்தது. நான் அவள் கண்களை உற்று நோக்கினேன். ஆனால் அவளுடைய ஓரப்பார்வை கூட என் பக்கம் திரும்பவே இல்லை. நான் என்ன யோசிக்கிறேன் என்று அவளும் நினைப்பாளோ என்று எண்ணியபடி மறுபடி ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் இடையிலான மௌனம் அதன் வேலையை தொடங்கியிருந்தது. முன்பு எப்போதோ நான் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வந்து தொலைத்தது.

மௌனம்
நம்மிடையே நிலவும் மௌனத்திற்கு என்ன வேலை தெரியுமா? - என்னை
உன்னை பற்றியே நினைக்கச் செய்வதும் - உன்னை
என்னை பற்றியே நினைக்காதது போல் நடிக்கச் செய்வதும் தான்.

மூடிய ஜன்னல் கதவுகளின் இடுக்குகள் வழியே குளிர் காற்று லேசாக ஊடுருவியபடி இருந்தது. குளிருக்கு ஏதுவாக அவள் தேனீர் கோப்பையை இரு கைகளிலும் அணைத்துப் பிடித்திருந்தாள். மழை இப்போது வலுத்து சத்தமாக பெய்யத் தொடங்கி இருந்தது. மழையின் சத்தத்தில், நான் அவளிடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேனோ அவை யாவும் மனதிற்குள்ளாகவே கரைவது போல் இருந்தது. பழகாதவர்களிடம் கூட என்னால் சுலபமாய் பேசி விட முடிகிறது. ஆனால் பழகிய அவளிடம் தான் சொல்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக எனக்குப் பட்டது. என் முகத்தில் குழப்ப ரேகை ஓடுவதை அவள் கவனித்திருக்க்க் கூடும் என்று தோன்றியது.  பிரச்சினை குறித்து முன்பாகவே அவள் யோசித்து முடித்திருக்கக் கூடும் என்பது அவளின் தெளிவான முகத்தை பார்த்து என்னால் யூகிக்க முடிந்தது. இருந்தாலும் யார் முதலில் மௌனத்தை உடைப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்தது.

கோப்பையைக் கீழே வைத்த போது அவளது வலது கையை என் இரு கைகளாலும் இறுக பற்றிக் கொண்டேன். அவள் தனது இடது கையை என் கைகளின் மீது வைத்துக் கொண்டாள். இருவரும் வார்த்தைகளை தொலைத்து விட்டிருந்தோம். ஏதும் பேசிக் கொள்ளவில்லை. எதுவும் பேச வேண்டும் என்று தோன்றவும் இல்லை.அவள் ஒரு சிறு குழந்தையை போல என் கை விரல்களை ஒவ்வொன்றாய் நீவி விட்ட படி இருந்தாள். இப்போது மழை நின்று போய் இருந்தது. இலைகளில் இருந்து துளிகள் வடிந்தபடி இருந்தன. ஓரிரு பூக்கள் லேசான காற்றில் சுற்றியபடி கீழே விழுந்து கொண்டிருந்தன. மண் வாசம் வீச ஆரம்பித்திருந்தது. மேல் திசையில் மேகங்களை விளக்கிக் கொண்டு சூரியன் தன் பொன் கிரணங்களை வீசத் தொடங்கி இருந்தது. தேங்கி கிடந்த நீரில் அவை ஒளிக்கோலங்களை போட்டுக் கொண்டு இருந்தது. என்றோ என் நாட்குறிப்பில் எழுதிய இரு வரிகளை மனக்கிடங்கில் இருந்து தோண்டி  எடுத்தது மனது.

மௌனம்
சில நேரங்களில் சாதிக்கும்
சில நேரங்களில் சோதிக்கும்

எங்களின் மௌனத்தை எந்த வகையில் பொருத்துவது என்று புலப்படவில்லை. மௌனத்தின் இடைவெளியில் நடப்பவைகள் யாவும் ஒரு விதமான அசாதாரண சுழலை உண்டாக்கி விடுகிறது. மீண்டும் ஜன்னலின் வெளியே பார்த்தபடி இருந்தோம், கைகள் கோர்த்தபடி. மனமெங்கும் ஈரமேறிக் கிடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. மழையின் மௌனத்தில் எங்களின் மௌனம் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டே இருந்தது.

1 comment:

Anonymous said...

Really Excellent.. can’t find words to explain….but still I will try my best…

உறவுகளின் இடையே ஏற்படும் உணர்வுகளை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறாய்

Describing the small things to the detail, like
"அவள் கையில் தேநீர் கோப்பையை பற்றி இருந்த விதம்", "கண்ணாடியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த நீர் துளி" & etc.. were too good..

என்ன காரணம் ...? ஏன் இந்த மௌனம் ...? அவர்களுக்குள் அப்படி என்ன பிரச்சனை..? அது எவ்வாறு தீர்ந்தது? என எதுவும் வெளிப்படையாக சொல்லாமல் வசிப்பவர்களின் கற்பனைக்கு வேலை கொடுத்தது கதையின் சுவாரசியத்தை மேலும் அதிகமாக்குகிறது..

பழகாதவர்களிடம் கூட சுலபமாய் பேசி விட முடியும்....ஆனால் பழகிய மனிதரிடம் தான் சொல்வது மிகவும் கடினம்.. how true those words are.. :)

நடுவில் வரும் diary குறிப்புகள் மற்றும் கவிதைகள் கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது..

Also this story once again proves that.. பேசிய 1000 வார்த்தைகளின் அர்த்தத்தை விட பேசாத சில நிமிட மௌனம் ஆழம் பொருந்தியது

And also .. இயற்கையின் ரசனையை கதையோடு, மிக அழகாக பிரிக்க முடியாத வகைகள் தந்தது மேலும் சிறப்பு.
பொதுவாக, காண்பவரின் மன நிலைக்கு ஏற்ப மேகங்கள் உறுப் பெறுகின்றன.. அதை போல இயற்கையை கதையின்/ நாயகனின் மன நிலைக்கு ஏற்றவாறு உருவகப் படுத்தியது மிகவும் அருமை..

கதையில் ஒரு சிறு நெருடல்.. வலுத்துப்பெய்த மழை நின்ற பின் மண் வாசனை வீச ஆரம்பித்தது என்பது எனக்கு முரணாகப் பட்டது.... மண் வாசனை என்பது மழைத் துளியின் முதல் முத்தத்தில் வரும் வாசனை என நான் எண்ணி இருந்தேன்..

Overall really excellent one.. I would rate this as the top most one among all other writings in your blog..

With Luv,
Varatharajan