Wednesday, November 04, 2009

ஊரணி கரையோரம்

நீரு வத்திப் போய் பாலம் பாலமா வெடிச்சுக் கிடக்குது கரிசல்குளம் ஊரணி. ஊரணில தண்ணி நிக்குறத பார்த்தே பல வருசம் ஆச்சு. ஊர் பொங்கலின் முளைப்பாரி போது கூட வண்டியில தண்ணி கொண்டு வந்து விடுற நிலைதான் இன்னமும் நடக்குது என்று பெருமூச்சுடன் முத்தையா தனக்குள் நினைத்துக் கொண்டு இருந்தான்.

ஊரணிக்கு மேக்கால* இருக்குற கரையில தீக்குச்சிய வருசயா* அடுக்குன கணக்கா புளியமரங்க வருசயா நிக்கும். கீழக்கரையில* ஆலமரங்க நாலு பெருசா விழுது போட்டு கிளை பரப்பி நிக்கும். கடைசி ஆலமரத்த ஒட்டினாப்புல ஊருக்கு போற வண்டிப்பாதையும் எதிரே பேச்சியம்மாக் கோவிலும் இருக்கும். கீழக்கரையில ஊரு காவல் தெய்வம் அய்யனார் கோவிலும், கண்மாய்ல இருந்து மண் அடிக்குற வண்டிங்க போற பாதையும, கண்மாய் மதகை துறந்துவிட்டா தண்ணி வரதுக்கு கால்வாயும் இருக்கும். சின்னப் பிள்ளைங்க கண்மாய்க்கு போறதுன்னா ஓடியாந்துருங்க. வழி முழுக்க இலந்தை மரமும், கள்ளிச் செடியும் நெறய கிடக்கும்.

ஏய் புள்ள ராமாயி! அங்கிட்டு என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறவ? ஆடுங்கள எங்க காட்டுல மேய்க்க சொல்லி தான் உங்கப்பாரு சொன்னாராக்கும். புளியமரத்துக்கு கீழ உட்கார்ந்து இருந்தமேனிக்கு குரல் கொடுத்தான் முத்தையா.

மாமோய், உங்க காட்டுல எங்க வீட்டு வெஞ்சனத்துக்கே* வெள்ளாமையக் காணோம். இதுல எங்க வெள்ளாடுங்க திண்ணு தான் குறைஞ்சிற போகுதாக்கும் என்று ஆட்டுக்கு குலை ஒடிக்க துரட்டியுடன் நின்று இருந்த ராமாயி பதிலுக்கு கத்தினாள்.

மாமன்கிற மட்டு மருவாத* தெரியுதா இந்த கழுதைக்கு என்று முனகியபடி பேச்சியம்மன் கோவிலுக்கு நடந்தான் முத்தையா. ராமாயி மஞ்சனத்தி மரத்திலேறி ஆட்டுக்கு குலை ஒடித்துக் கொண்டே மாமன் போற திசைய பார்த்தபடி இருந்தாள்.

பேச்சியம்மன் கோவில் முன்னால ஆலமர விழுதுகள்ல ஊருல இருக்குற பொடிசுக ஊஞ்சலாட வந்துரும் எப்பவும். வெயிலா மழையானு கூட பாக்காதுங்க. கயித்து முனையில ஒரு பெரிய டயரை கட்டி ஒன்னு உட்காந்துக்க பின்னால இருந்து இன்னொன்னு தள்ளி விடும். எட்டு வயசு லட்சுமி - முத்தையாவோட அக்கா புள்ள - அங்குன தான் விளையாடிக்கிட்டு இருந்துச்சு. லட்சுமியை கூப்பிட்டு ராமாயியிடம் ஒத்த காயிதத்தை* கொடுத்துவர சொல்லிட்டு இடுப்பு வேட்டி மடிப்புல இருந்து ஒரு தேன்மிட்டாய எடுத்து அவ கையில திணிச்சான் முத்தையா.

காயிதத்துல ஊரணி ஒரமா இருக்குற மரத்துல ராமாயி துரட்டியோட குலை  ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக வரைஞ்சிருந்தான் முத்தையா. லட்சுமி ராமாயியிடம் அந்த காயிதத்தை கொடுக்க பூத்துக் கிடக்குற பருத்தி செடிகள தள்ளிக்கிட்டு போனா.

லட்சுமி வருவதை பார்த்த ராமாயி - "வாடி என் சின்ன சக்காளத்தி, என்ன கொடுத்துவுட்டாரு உன் புருஷன்னு" வம்புக்கு இழுத்தா.

என்னையா வையிற*...இரு...இரு...உன்னய எங்க ஐயப்பாகிட்ட சொல்லிக் கொடுக்குறேன். முத்தன் (முத்தையா என்று முழுசா சொல்ல வராது லட்சுமிக்கு) மாமா இத்த உன்கிட்ட கொடுத்தாற சொல்லுச்சுனு கொடுத்துட்டு ரெண்டு பருத்திப்பிஞ்ச பிடுங்கி திண்ணுக்கிட்டே போனா லட்சுமி.

ராமாயி காயிதத்த பிரிச்சு பார்த்தா. மரத்துல ராமாயி துரட்டியோட குலை  ஒடிச்சுக்கிட்டு இருக்குற கணக்கா அழகாக - அட இது என்ன ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குது. ராமாயிகிட்ட யாரும் இதுவர கதை* போட்டு செயிச்சது கிடையாது. மாமன் வரைஞ்ச கதை ராமாயிக்கு புரிய ஆரம்பிச்சுது - ஊரணியில தண்ணி நிறைஞ்சு நிக்குறது எப்படி நடக்காதோ அப்படி தான் வேற சாதியில பொறந்த நம்ம கல்யாணமும்னு முத்தையா மாமன் சொல்லாம சொல்லியிருக்குதுனு.

பொல பொலனு கண்ணுல வடியிற கண்ணீரோட ராமாயி சொன்னா.
என் மாமனுக்கு நெஞ்சுல ஈரம் மிச்சம்
எனக்காவது கண்ணுல ஈரம் மிச்சம்
ஈரம் இல்லாம போச்சே ஊரணிலயும்
ஊருல சாதிப்பேர சொல்லி அலையறவங்க மனசுலயும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மேக்கால* - மேற்கில்; வருசயா* - வரிசையா; கீழக்கரை* - கிழக்கில் இருக்கும் கரை; வெஞ்சனம்* - சாதத்துடன் தொட்டுக் கொள்ள செய்யப்படும் காய்கறி; மருவாத* - மரியாதை; காயிதம்* - காகிதம்; வையுதல்* - திட்டுதல்; கதை* - விடுகதை
--------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: