Friday, November 13, 2009

காத்திருப்பின் ஒரு துளி

வேதரத்தினம் பிள்ளை பூங்கா - நாங்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளும் இந்த பூங்கா ஊருக்கு சற்றே ஒதுக்குபுறமாகத் தான் இருக்கிறது. வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் பின் என்ன வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் இடங்களிலா சந்தித்துக் கொள்ள முடியும்? தாம்பரம் தாண்டி மாடம்பாக்கம் போகிற வழியில் இருக்கிறது.

பூங்காவில் என்னையும், வயதான ஒருவரையும் தவிர வேறு யாருமில்லை. குருவிகளையோ, அணிலையோ, பட்டாம்பூச்சியையோ பார்த்து ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. அந்த வயதானவரும் அசதியில் இருப்பதாகத்தான் பட்டது.

நான் வந்து ஒரு மணி நேரமாகியாச்சு. அவள் இன்னும் வரவில்லை. ஃபோன் செய்தாலும் ரிங் போய்க்கிட்டே இருக்கு.மனம் நிலை கொள்ளாமல், அவள் ஏன் இன்னும் இங்கு வரவில்லை என்ற கேள்விக்கு ஆயிரமாயி்ரம் பதில்களில் சமாதானம் அடையாமல் தவித்துக் கொண்டிருந்தது.

வயதானவர் என்னருகில் வந்து நிற்பது போன்று இருந்தது. தலையை சொறிந்த படி நின்று கொண்டிருந்தார். சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றேன். இந்த மாதிரி விஷயம் எல்லாம் அவளால பண்ண ஆரம்பிச்சது தான்.

தாம்பரம் வித்யா தியேட்டரில் 'பசங்க' படம் வந்திருந்த சமயம். நாங்கள் இருவரும் சென்று இருந்தோம்.அதன் பிறகு ஒரு முறை மாடம்பாக்கம் கோவிலுக்கு சென்றோம். பேருந்துக்காக நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தோம். பாட்டி ஒருவர் வந்து நின்றார். திடீரென என் சட்டைப் பையில் இருந்து ஒரு ஐம்பதை எடுத்து அவரிடத்தில் கொடுத்து நன்றாக சாப்பிடுங்கள் என்றாள். அன்று முதல் இன்று வரை அவளின் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நல்ல விஷயம் தானே.

பூவரச மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்து கண்கள் மூடி படுத்துக்கொண்டேன். கடிகாரத்தின் டிக்-டிக் சத்தமும், இதயத்தின் லப்-டப் சத்தமும் ஒரு சேர காத்திருப்பின் அசுர நொடிகளை கடந்து கொண்டிருந்தது.
 ****************************************************************************
செல்ஃபோனை எடுத்து அவள் நம்பருக்கு டயல் செய்தேன். எஸ்.பி.பியின் குரலில் ஹலோ ட்யூன்ஸ் கேட்கத் தொடங்கியது.
முன் பனியா..முதல் மழையா..
என் மனதில் ஏதோ விழுகிறதே..
விழுகிறதே..நனைகிறதே..ஓ..ஓ..ஓ..
புரியாத உறவில் நின்றேன்..அறியாத சு..


மறுமுனையில் இருந்து அவள் தான் பேசினாள். ஹலோ..இன்னும் ஒரு ட்வென்டி மினிட்ஸ் ஆகும் டா. செல்லம், ஸாரி டா, ப்ளீஸ் டா வெயிட் பண்ணு. சரியா ரொம்ப போர் அடிச்சா ஆப்போசிட் ஆவின் பூத்ல போய் ஒரு பால் சாப்பிடு.ஒகேவா?

நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தேன்.

என்னடா கோபமா? எதுவுமே பேச மாட்டேங்குற? - இது அவள்.

நான் கோவிச்சுக்கலைனா அவளுக்கு பிடிக்காது. நான் கோவிக்காதது மாதிரி அவ நடந்துக்கிட்டா எனக்கு பிடிக்காது.

பின்ன என்ன? எவ்வளவு நேரமா இங்க நின்னுக்கிட்டு இருக்கேன் தெரியுமா?
மெட்ராஸ்ல எல்லா இடத்துலயும் இருக்குற கொசு கூட இந்த பார்க்ல இல்லை, என்னைத் தவி்ர.

அவள் பதில் சொல்ல ஆரம்பித்தாள்-அது வந்து என்னென்னா? இந்த ராஜா இருக்கான்ல..அவனோ..

அவளை இடைமறித்து - இங்க பார். எனக்கு செம கடுப்பா இருக்கு. எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுதா? நீ என்ன ரீசன் சொன்னாலும் சரி நான் கேட்க போறதில்ல சரியா.அடுத்த டென் மினிட்ஸ்ல நீ இங்க வரலை அப்புறம் அவ்ளோ தான். ஃபோனை கட் செய்தேன்

ஹலோ ட்யூன்ஸ்ல கூட சுகங்கிற வார்த்தைய கேட்க விடமாட்டேஙகுறாளே. வரட்டும் இன்னிக்கு என்று எனக்குள் முணுமுணுத்துக் கொண்டேன். காதலின் இலக்கணம் மீறப் படாமலே ரெண்டு பேரும் எங்க லெவல மெயின்டைன் பண்ணிக்கிட்டு இருந்தோம்.
 ****************************************************************************
இன்னும் பத்து நிமிடங்கள் ஓட்ட வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் சொன்னது போல் ஆவின் பூத் நோக்கி நடக்கத் தொடங்கினேன். ஒரு பால் சொல்லி வாங்கிக் கொண்டு காசுக்காக பர்சை எடுக்கையில், எப்.எம்-மில் யாருடைய காதல் கதையையோ உம் கொட்டி கேட்டுக் கொண்டிருந்த லேடி சொன்னாள் - கடைசியா நம்மகிட்டே; பேசின நேயருக்காகவும்; உங்க எல்லோருக்காகவும்; நம்ம சின்ன மார்கண்டேயன்; சூர்யா நடித்த; நேருக்கு நேர் படத்தில் இருந்து;வரப்போற பாடலை கேளுங்க; கேட்டு ரசிங்க; தொடர்ந்து கால் பண்ணி பேசுங்க; அண்ட் இது உங்களின் காதல் கதை நேரம்...

அவள் வருவாளா..அவள் வருவாளா..அவள் வருவாளா..
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க அவள் வருவாளா..


ரொம்ப முக்கியம். வந்த கடுப்பை அடக்கிக் கொண்டு வேகமாக வந்து அந்த பாட்டு கேட்காதபடி பூங்கா பெஞ்சில் மறுபடி அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் வைத்திருந்த ஆப்பிள் ஐபாடை எடுத்து மாட்டிக் கொண்டு வழக்கம் போல இளையராஜாவின் மெலோடியில் நனைய தொடங்கினேன்.

ஆப்பிள் ஐபாடை போன பிறந்த நாளின் போது அவள் தான் பரிசளித்தாள்.அவளை சந்திக்க வரும் போதெல்லாம் அவள் வாங்கிக் கொடுத்த வாட்ச், அவளுக்கு பிடித்த கலர்ல காம்பினேஷன்ல டிரஸ், அவ வாங்கிக் கொடுத்த பொருட்கள் எல்லாம் இல்லைனா அவ்ளோ தான். ஏற்கனவே காதலிச்சவங்களுக்கு இந்த மாதிரி இத்தியாதிகள் எல்லாம் தெரிஞ்சு இருக்கும்.

அந்த பூங்காவின் வழியே செல்லும் பிகர்களை "அ..ஆ..இ..ஈ.." என்ற வரிசையில் வகைப்படுத்த தொடங்கினேன். எப்படியும் அவள் வந்ததும் கேட்பாள்-என்ன இன்னைக்கு எத்தனை பிகர்களை சைட் அடிச்சீங்க. நானும் ராமன் தான்னு சொல்லணும். நம்புறாலோ இல்லையோ அது வேற விஷயம்.

மனித வாழ்க்கையில் எவ்வளவு நேரம் காத்திருப்பில் கழிகிறது தெரியுமா என்று கவிஞன் எமர்சன் ஏற்கனவே கேட்டு வைத்தது நினைவிற்கு வந்து போனது. காத்திருப்பது ஒரு சுகமான அவஸ்தை என்று கொண்டாலும் காத்திருப்பின் இடைவெளிகளில் மனதின் ஒட்டங்கள் கவலையுடன் கூடிய ஒருவித எதிர்பார்ப்பை கூட்டி விடுகின்றன.

காத்திருப்பு
காத்திருப்பின் இடைவெளிகளில் நொடிகள் கூட கணம்
காத்திருப்பின் முடிவுகளில் நினைவுகள் கூட கணம்
காதலில் காத்துக் கிடப்பதும் காக்க வைப்பதும் எப்போதுமே சுகம்.


அட, நமக்குக் கூட கதை, கவிதை மாதிரி எதோ வருது பாரேன். ஐபாடை அணைத்து வைத்தேன். அடச்சே..என்ன இப்படி சம்பந்தமே இல்லாம எதையோ நினைச்சுக்கிட்டு இருக்கோம் என்று தோன்றியது.

என்னென்னோவோ யோசித்துக் கொண்டிருக்கையில், அவள் எனக்கு பின்னால் நின்று கொண்டு எனக்கு டயல் செய்தாள். என் செல்ஃபோன் பாடத் துவங்கியது.

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு...கனவை எடுத்து செல்ல வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே...


கோபம் எல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ள, மெதுவாக திரும்பி அவளை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். எனக்கு டைம் அவுட் என்பது மட்டும் அவள் பார்வையில் இருந்து புரிந்தது.

No comments: