Friday, November 20, 2009

ஜன்னலின் வழியே...

 பக்கத்து வீட்டு வள்ளி அக்கா எல்லோரிடமும் அன்போடு நன்றாக சிரித்து பேசுவாள். ராஜு மாமா, வள்ளி அக்காவின் கணவர், காலையில் ஏழு மணிக்கு ரயில் பிடித்தால், வேலை முடிந்து இரவு எட்டரை மணிக்கு தான் வீட்டுக்கு வருவார். குழந்தைகள் குமாரும், ராணியும் பள்ளி முடிந்து வீடு வர ஆறு மணி ஆகிவிடும். வந்ததும் குமாரும், ராணியும் நேரே டி.வி முன் சென்று உட்கார்ந்து கொள்வார்கள். அதன் பிறகு ஜெட்டிக்ஸ் அல்லது கார்ட்டூன் நெட்வொர்க் டி.வி தான் அவர்கள் உலகம். ஆனால் வள்ளி அக்காவின் உலகமே வேறு. வேடிக்கை பார்ப்பதும், அக்கம் பக்கத்தாருடன் பேசுவதும் எப்போதும் ஜன்னலின் வழியே தான், இல்லை ஜன்னலின் வழியே மட்டும் தான் என்று சொல்ல வேண்டும்.

வள்ளி அக்கா எங்கள் பக்கத்து வீட்டிற்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இதுவரை அவள் வெளியே சென்றது என்று நினைவில் இருப்பவை வெகு சில நாட்கள் மட்டுமே. கோடை விடுமுறையின் போது குழந்தைகளை சென்னையில் உள்ள ராஜு மாமாவின் தங்கை வீட்டிற்கு அழைத்து செல்லும் போதும், குழந்தைகளின் பிறந்த நாளில் கோவிலுக்கு செல்லும் போதும் தான் வள்ளி அக்கா வெளியே வருவாள். கோவில் உற்சவங்களின் போது சாமி தரிசனம் செய்ய மற்ற எல்லோரும் வெளியே வந்தால் கூட வள்ளி அக்கா மட்டும் ஜன்னலின் வழியே சேவித்து விட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வாள்.

எங்கள் வீட்டின் ஜன்னலுக்கும் வள்ளி அக்கா வீட்டின் ஜன்னலுக்கும் இடையே வெறும் மூன்றடி இடைவெளி தான். என் அண்ணி அடிக்கடி கேட்கும் "ஏன்க்கா இப்படி வீட்டுக்குள்ளயே இருக்குற?" என்ற கேள்விக்கு வள்ளி அக்கா எப்போதும் சொல்லும் பதில் இதுதான் - ஜன்னலின் வழியே தான் உலகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. எனக்கும் உலகத்தை அப்படி பார்ப்பது தான் பிடித்திருக்கிறது என்பாள். எனக்கு தெரிந்து எங்கள் வீட்டிற்கே இதுவரை பத்து முறைக்கு மேல் வந்திருக்க மாட்டாள். நவராத்திரி கொலுவின் போது கடைசி நாள் மட்டும் வள்ளி அக்கா தவறாமல் வருவாள்.

வெளியே செல்வது அரிதே என்றாலும் வள்ளி அக்கா ஆடைகள் உடுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துவாள். ஜன்னலின் வழியே என் அண்ணியிடம் எப்படி இருக்குது என்று குறைந்தது மூன்று அல்லது நான்கு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டாள். வள்ளி அக்கா விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்பதில் ரொம்ப அக்கறை காட்டுவாள். அவள் சமைப்பதில் கொஞ்சம், வாரத்தில் இரண்டு முறையாவது  எங்கள் வீட்டுக்கும் வந்துவிடும் - ஜன்னலின் வழியே தான். அதற்கென ஒரு நீண்ட இரும்பு கம்பியும் சிறிய தூக்கும் வைத்திருப்பாள்.

ஒரு முறை வள்ளி அக்காவிடம் ஜன்னலின் வழியே பேசிக் கொண்டிருந்த போது சொன்னாள் - உனக்கொன்னு தெரியுமா சீனு? வெளிச்சம் குறைவான இடத்திலிருந்து ஜன்னல் வழியே பார்த்தால் வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தின் காட்சிகள் தெளிவாய் தெரியும். நீ வேணும்னா அடுத்த முறை பார்க்கும் போது கவனி என்றாள். இந்த மாதிரி ஒரு விஷயத்தை இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது. வள்ளி அக்கா அதிகம் படித்தவளில்லை. எப்படி அவளுக்கு இதெல்லாம் யோசிக்க தோன்றுகிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது.

ஒரு முறை மின்தடையின் போது விளக்கேற்ற மனமின்றி ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தேன். வள்ளி அக்கா வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாள்.  குமாரும் ராணியும் மெழுகின் வெளிச்சத்தில் கைகளை மடக்கி நிழல் உருக்களை உருவாக்கி விளையாடி கொண்டிருந்தார்கள். இங்கிருந்து பார்க்கையில் வள்ளி அக்கா சொன்னது உண்மை தான் என்று தோன்றியது. ஜன்னலின் வழியே நடக்கும் நிகழ்வுகளை பற்றி வள்ளி அக்கா வேறு என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. எல்லோருக்கும் சிறு வயதில், பயணங்களின் போது ஜன்னல் சீட் வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். வள்ளி அக்காவிற்கு அந்த ஆசை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது போலும் என்று தோன்றியது.

ஒரு முறை ரயிலில் இருந்து இறங்கும் போது என் வலது கால் பிசகி விட்டது.  ஐந்து நாட்கள் வீட்டில் இருக்கும் படி நேர்ந்தது. ஒரு நாள் ஜன்னலின் வழியே வள்ளி அக்கா, அண்ணி, நான் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம். வள்ளி அக்கா மிகுந்த ஆவலோடு இருட்டிக் கொண்டு வந்த கருமேகத்தை பார்த்தபடி இருந்தாள். மழை வரும் போல் தெரிகிறது-என்றேன் நான். ஆமாம் சீனு! மழை பெய்யத்தான் போறது பாரேன். ஆனா நாம தான் ஜன்னல் வழியா வெயில வீட்டுக்குள்ள விடுற மாதிரி மழையை அனுமதிக்கிறதில்லை என்றாள். எத்தனை உண்மை அது. ஜன்னலின் வழியே வெயில் நம் வீடுகளுக்குள் ஊர்ந்து போவதை போல் மழையின் சாரலை விழ விடுவதில்லை. வள்ளி அக்கா அன்று மழையின் போது ஜன்னல்களை மூடாமல் சாரலில் நனைந்தபடி இருந்தாள். ஜன்னல் வழி உலகம் அவளுக்கு பிடித்திருந்ததை போல வேறு யாருக்காவது பிடித்திருக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென ஒரு நாள் அண்ணியிடம், ராஜு மாமாவிற்கு பொன்மலைக்கு மாற்றலாகி இருப்பதாகவும், இன்னும் மூன்று நாட்களில் வீட்டையும் காலி செய்யப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள் வள்ளி அக்கா. பசங்களுக்கும் விஜய தசமியில் ஸ்கூல் சேர்த்து விட முடியும் என்றும் கூறினாள். அங்கே பார்த்து இருக்கும் வீட்டில் ஜன்னல் கம்பிகள் இங்கிருப்பது போல் அழகாய் இல்லை என்றும் சொன்னாள். உங்களை எல்லாம் அடிக்கடி நினைச்சுக்குவேன். என்னை மறந்துடாதீங்க என்று கண்களில் நீரை வைத்துக் கொண்டாள். அவள் கிளம்பிய அன்று நவராத்திரியின் ஏழாவது நாள். போகும் போது கூட ஒரு மணி நேரம் ஜன்னல் அருகே நின்று கண்ணீர் சிந்தி இருக்கிறாள். இந்த முறை அவள் நவராத்திரி கடைசி நாள் எங்கள் வீட்டுக்கு வர முடியாது. அவளுடைய வீட்டு ஜன்னல் மூடிக்கிடந்தது.

வள்ளி அக்கா வீடு மாறிப்போய் இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஜன்னலுக்கும் வள்ளி அக்கவிற்குமான உறவு வார்த்தைகளில் சொல்ல முடியாதது. ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். வள்ளி அக்கா சொன்னது போல் ஜன்னலின் வழியே உலகம் அழகாய்த்தான் இருக்கிறது. அவள் போன பின் மூடிய ஜன்னல்கள் திறக்கப்படுவதே இல்லை. புதிதாய் குடி வந்தவர்களின் உலகம் எப்போதும் இந்த மூடப்பட்ட ஜன்னல்களுக்கு பின்னால் தான். எப்போது ஜன்னலை பார்த்தாலும் வள்ளி அக்காவின் நினைவு வந்து போவதை தடுக்க முடிவதில்லை. காற்றில் துகள்கள் பறந்த படி இருந்தன. வெளிச்சம் எங்கள் வீட்டுக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது - ஜன்னலின் வழியே...

3 comments:

Peru... said...

Too good sir...

Ramani said...

Nice one !

~ சுரேஷ் அழகர்சாமி said...

@Perumal,
Ungal varugaikkum adharavirkkum nandri.

@Ramani,
Nandri ba.