Monday, December 28, 2009

கோர்வையற்ற நினைவுகளின் தொகுப்பு

நினைவில் நின்றவை...

சில மாதங்களுக்கு முன்பு நானும் எனது மாமாவின் பையனும் ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். பண்டிகை சமயத்தில் சென்னை சென்று துணி எடுப்பது வழக்கம். இந்த முறையும் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய தான் சென்று கொண்டிருந்தோம். அமெரிக்கா சென்று வந்த பின் அங்கே வெதர் எப்படி இருக்கும், என்ன பண்ணுவீங்க, எப்படி பயணம் செய்வீர்கள், சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கும் என்ற அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதே எனக்கு சரியாக இருக்கும். அன்றும் ரயில் ஏறியதில் இருந்தே அவன் கேள்விகளை கேட்க ஆரம்பித்திருந்தான். திடீரென்று எனது செல்போன் அலறியது. அவன் தான் செல்போனில் பாட்டு கேட்க வேண்டும் என்று வாங்கி கையில் வைத்திருந்தான். அழைப்பு வந்ததும் என் கையில் திணித்தான். எண்ணை வைத்து யார் கால் செய்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியவில்லை. போனை எடுத்து ஹலோ என்றேன். மறுமுனையில் இருந்து என் பெரியப்பாவும் அண்ணனும் பேசினார்கள். போனை வைத்த பின் நம்பரை ஸ்டோர் செய்தேன். அது வரை பக்கத்தில் இருந்த மாமா மகன் இவங்க நம்பர் வேண்டுமா, அவங்க நம்பர் வேண்டுமா என்று தொடர்ச்சியாக ஒரு பதினைந்திற்கும் மேலான போன் நம்பர்களை வரிசையாக அவனது செல்போனை பார்க்காமல் சொன்னான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் இதே போல் செல்போன் வராத காலத்தில் நான் மனப்பாடமாக வைத்திருந்த நம்பர்களின் எண்ணிக்கை ஐம்பதையும் தாண்டும் என்றளவு நினைவிற்கு வந்தது. சற்று நேரத்திக்கு முன் போன் செய்த பெரியப்பாவின் நம்பர் கூட எத்தனையோ முறை அம்மா போன் பேசும் போது சொல்லி இருக்கிறேன். எப்படி இவை எல்லாம் மறந்து விட்டன என்று யோசித்தபடி இருந்தேன். முதன் முதல் செல்போன் வாங்கி ஓசூரில் வைத்து தொலைத்த போது அதில் போட்டிருந்த அப்போதைய ஹட்ச் செல்போன் நம்பர் கூட என் நினைவிற்கு வரவில்லை. ஓசூரில் இருக்கும் போது அடிக்கடி நான் கூப்பிடும் இரண்டு நண்பர்களின் பழைய செல்போன் நம்பர்கள் கூட நினைவிற்கு வரவில்லை. நண்பர்களுக்கே போன் போட்டு கேட்டேன். அவர்களுக்கும் நினைவில் ஏதும் இல்லை என்றார்கள். இப்படி நாம் எதையெல்லாம் மறந்து கொண்டிருக்கோமோ தெரியவில்லை.

உங்களுக்கு உங்கள் பழைய செல்போன் நம்பர் நினைவில் இருக்கிறதா?

வேடம் கலைந்தது...

சில நாட்களாக காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்திலோ அல்லது ரயிலிலோ அலுவலகம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். வீட்டில் இருந்து செல்வதால் காலையில் முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனே போன திங்கள் கிழமையும் கிளம்பினேன். திங்களன்று காலை எப்போதும் ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அன்று தாம்பரம் வழியாக அடையாறு செல்லும் ஏழு மணி பேருந்தில் ஏறினேன். எட்டரை மணிக்கு தாம்பரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு பீச் செல்லும் மின்சார ரயில் சென்றவுடன் திறப்பார்கள். அன்றும் மூடப்பட்டிருந்த கேட் முன் பேருந்து நின்றது. சற்று நேரத்தில் பக்கத்தில் ஒரு தனியார் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வண்டி வந்து நின்றது. வண்டியின் முன் வரிசையில் விவாஷ் ஜெயினும், ஹரிபிரசாத்தும் அமர்ந்திருந்தார்கள். எப்படி பெயர் தெரியும் என்று கேட்கிறீர்களா? அவர்களின் அடையாள அட்டையில் தான் நானும் பார்த்து தெரிந்து கொண்டேன் [ஆறு வருஷ அனுபவம்ல!!!...ம்ம்ம்]. அவர்கள் முகத்தில் திங்கள்கிழமை பள்ளி செல்லும் சோகம் எதுவும் தெரியவில்லை. மாறாக உற்சாகம் ததும்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த வண்டியில் இருந்த குழந்தைகள் அனைவருமே உற்சாகத்தோடு காணப்பட்டனர். ஒருவரிடம் இருந்து உற்சாகம் மற்றவர்களுக்கு பரவியிருக்கக்கூடும். நானும் காதில் ஐபாடை மாட்டிக்கொண்டு, கேட்டாலே உற்சாகம் தரும் பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த விவாஷும், ஹரியும் ஜன்னல் பக்கம் பார்த்தவுடன் என்னைப் பார்த்து உற்சாகத்தோடு கையசைத்தார்கள். நானும் ஐபாடை காதில் இருந்து எடுக்காமல் அவர்களை பார்த்து புன்னகைத்தேன். வண்டி டிரைவர் கையெல்லாம் வெளியே நீட்டக் கூடாது என்று சத்தம் போட்டார். இருவரும் சடக்கென்று கையை உள்ளே இழுத்துக் கொண்டனர். இரண்டு நொடிகள் கூட கடந்திருக்காது. ஒரக்கண்ணில் டிரைவரை பார்த்தபடி விவாஷும், ஹரியும் மறுபடி என்னைப் பார்த்து கையசைத்தார்கள்-இப்போது இன்னும் அதிக உற்சாகத்துடன். டிரைவர் அவர்களை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டார். இதுவரை நான் அவர்களை பார்த்து புன்னகைத்தேனே தவிர, காதில் இருந்து ஐபாடை எடுக்கவோ, கையசைக்கவோ இல்லை. என் சீட்டில் கடைசியாக இருந்த சிறுவன் அவன் அப்பாவை நகர சொல்லி விட்டு என்னையும் தாண்டி அவர்களை நோக்கி கையசைத்தான். எனக்கு இப்போது தான் உரைத்தது-நான் உற்சாகம் என்று சொல்லிக் கொள்வது உற்சாகம் அல்ல என்று. ஐபாடை எடுத்து உள்ளே வைத்தேன். விவாஷையும், ஹரியையும் நோக்கி உற்சாகமாக நானும் கையசைத்தேன், என்னருகில் இருந்த பெயர் தெரியாத சிறுவனை மடியில் வைத்துக் கொண்டு. மனம் எங்கும் உற்சாகம் பரவிக் கொண்டிருந்தது.

உங்கள் உற்சாகம் எதில் இருக்கிறது என்று தெரியுமா?

அனுபவம் பேசுமா?

தாம்பரம் - இரவு காஞ்சிபுரம் செல்ல வழக்கமாக பிடிக்கும் எட்டு மணி ரயிலை அவசர அவசரமாய் சென்று கடைசி நிமிடத்தில் ஒரு வழியாக பிடித்தேன். இல்லையென்றால் பேருந்திலோ அல்லது ஒன்பது மணி ரயிலை பிடித்தாலோ, வீடு செல்ல பத்தரை மணிக்கு மேல் ஆகிவிடும். வழக்கம் போல் இன்றும் ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூடுவாஞ்சேரி வந்ததும் கூட்டம் கொஞ்சம் இறங்கும் . அதன் பிறகு தான் உட்கார இடம் கிடைக்கும். காஞ்சிபுரம் செல்லும் வழியில் பழையசீவரத்திலும், வாலாஜாபாத்திலும் கொஞ்சம் கூட்டம் இறங்கிடும். திருமால்பூர் வரை செல்லும் ரயிலில் காஞ்சிபுரத்தில் இறங்கியது போக, மிகவும் சிலரே செல்வார்கள்.

நெரிசலில் நெருக்கி தள்ளி ஒரு வழியாக உள்ளே சென்றேன். ஓரளவுக்கு ஏதுவாக நின்று கொண்டு பையில் வைத்திருந்த ஐபாடை எடுத்து காதில் சொருகி கொண்டேன். பெருங்களத்தூரில் கொஞ்சம் கூட்டம் இறங்கியது. புதுப்பட பாடல்களில் இருந்து இளையாரஜவிற்கு தாவினேன் - மனோவின் குரலில் 'ஒ பிரியா பிரியா' பாடியது. அது வரை பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் "இந்த போன் கொரியன் செட்டா சார்" என்று கேட்டார். நான் காதில் இருந்து இயர் போன்களை எடுத்து விட்டு, இல்லைங்க இது ஒரிஜினல் கம்பெனி பீஸ் தான் என்றேன். அப்படியா சார், பேட்டரி எவ்ளோ நேரம் நிக்கும் என்றார். நான் குறைந்தது எட்டு மணி நேரம் நிக்கும் என்றேன். அவரிடம் இது போன் இல்லை வெறும் பாட்டு கேக்குறதுக்கு தான் என்று சொல்ல எத்தனித்த போது அவர் வண்டலூரில் இறங்கியே விட்டார்.

கூடுவாஞ்சேரியில் உட்கார இடம் கிடைத்தது. ஐபாடை எடுத்து உள்ளே வைத்து விட்டு பையில் வைத்திருந்த வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெருவை படிக்க ஆரம்பித்தேன். செங்கல்பட்டில் ஐந்து நிமிடம் நின்று சிக்னல் கிடைத்த பிறகு தான் ரயில் புறப்படும். அதற்குள் பின்னாடி இருக்கும் பெட்டிக்கு சென்று விட்டால் காஞ்சிபுரத்தில் பிளாட்பாரத்தில் இறங்கி ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்காது. இறங்கி பின்னாலிருந்து மூன்றாவது பெட்டிக்கு சென்று ஜன்னலோரமாய் அமர்ந்து கொண்டேன். எனக்கு எதிரே ஐம்பதுக்கும் மேல வயசு இருக்கிற ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். கையில இருந்த மாலை மலரை பைக்குள்ள வெச்சிட்டு என்னை பார்த்தார். நான் மறுபடியும் ஐபாடை எடுத்து காதுக்கு கொடுத்தேன். ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும் ஏரியில் இருந்து காற்று வீசி கொண்டிருந்தது. ரயிலில் எரியும் விளக்கிற்கு ஏகமாக பூச்சிகள் பறந்து வந்து கொண்டிருந்தன.

நிறைய விஷயங்களை பத்தி நினைச்சுகிட்டே பாட்டை கேட்டுகிட்டு இருந்தேன். ரயில் புறப்பட்டு கொஞ்சம் தூரம் போயிருக்கும். தொடர்ந்து சீட்ல உட்கார கஷ்டமா இருக்கேன்னு எழுந்து கதவுக்கு பக்கத்துல போய் நின்றேன். காற்று சுகமா இருந்தது. கண்ணை மூடிக்கிட்டு கம்பியை புடிச்சிக்கிட்டு நின்று கொண்டிருந்தேன். பாலூர் ஸ்டேஷன் வர இன்னும் பத்து நிமிஷம் ஆகும். கொஞ்ச நேரத்துல எனக்கு எதிரே உட்கார்ந்திருந்தவர் எழுந்து வந்தார். வெளியே பார்த்துட்டு எனக்கு எதிரே பேப்பரை விரிச்சு கிழே உட்கார்ந்தார். ரொம்ப நேரம் சீட்ல உட்கார முடியலை என்று சொன்னார். அட நம்ம போல தான் எல்லோரும் நினைக்கிறாங்க போல என்று நினைத்து கொண்டேன். மறுபடி கண்ணை மூடிக்கிட்டு ஐபாடுல ஓடிகிட்டு இருந்த ஒ பட்டர்பிளை பட்டர்பிளை பாட்டை கேட்டுகிட்டு இருந்தேன்.

திடீர்னு தம்பின்னு யாரோ கூப்பிடுற மாதிரி இருந்தது. கண்ணை துறந்து பார்த்தேன். என்ன தம்பி ஏதாவது குழப்பத்துல இருக்கீங்கலானு எதிர்க்க இருந்தவர் கேட்டார். எனக்கு ஒன்னும் புரியவில்லை. உங்களை தான் தம்பி கேக்குறேன் என்று மறுபடி சொன்னார். நான் அதெல்லாம் ஒன்னுமில்லையே என்றேன். இல்லை...நீங்க கண்ணை மூடிக்கிட்டு இருந்தப்போ உங்க முழி எங்கேயும் நகரலை. வழக்கமா தூக்கத்துல இருந்தாலோ இல்லை அசதியா இருந்தாலோ கண்ணை முடியிருந்தாலும் முழி அங்கேயும் இங்கேயும் நகரும். அதான் கேட்டேன் என்றார். இப்படி எல்லாம் வேற இருக்கா என்று எனக்கு தோன்றியது. அவரே தொடர்ந்தார். என்ன குழப்பம்னு உங்களுக்கு தோணுச்சுனா சொல்லுங்க தம்பி என்றார். நான் மறுபடி ஒண்ணுமில்லை சார் என்றேன்.

தம்பி உங்களை பார்த்தா ஐடி கம்பெனியில வேலை பாக்குற மாதிரி தெரியுது என்றார். நான் ஆமாம் என்றேன். உங்க ப்ரொஜெக்ட்ல ஏதாவது பிரச்சினைனா என்ன பண்ணுவீங்க தம்பி என்றார். எனக்கு ஏன் இதை கேட்கிறார் என்று புரியவில்லை. இவருக்கு எதுக்கு பதில் சொல்லனும்னு என்ற எண்ணம் கூட எனக்கு வரவில்லை. பிரச்சினையை தீர்க்கிறதுக்கு என்ன வழிகள் இருக்குன்னு பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றேன். முடிந்த வரை டெக்னிக்கல் வார்த்தைகளை உபயோகிக்காமல் பதில் சொன்னேன். அப்படியும் தீரலைனா என்றார். அதே மாதிரி பிரச்சினை இதுக்கு முன்னாடி வேற ப்ரொஜெக்ட்ல யாராவது சந்திச்சு இருந்து தீர்த்திருந்தா அவங்களோட வழிகாட்டுதலோட தீர்ப்போம் என்றேன். ஏன் தம்பி..வேலையில இப்படி மத்தவங்களை கேக்குறது மாதிரி வாழ்க்கையில் சொந்த பிரச்சினைக்கு வழி கேட்டா குழப்பம் இருக்காதுல என்றார். எனக்கு சுரீர் என்றது.

இவர் ஏன் இதெல்லாம் நம்மகிட்டே சொல்றார் என்ற வியப்பு அடங்குமுன் அவரே தொடர்ந்தார். என்ன பிரச்சினைன்னு பெத்தவங்க கிட்டே பசங்க சொன்னா அவங்க வழி சொல்ல போறாங்க. அவங்களும் உங்களை மாதிரி வயசு பருவங்களை தாண்டி தானே வந்திருக்காங்க. ஏன் அவங்க கூட காதலை சந்திச்சு தாண்டி வந்தவங்களா இருக்கலாம். பெத்தவங்க யாரும் கண்ணை மூடிக்கிட்டு காதலை எதிர்க்கிறது இல்லை. சமூகத்தோட பார்வை ரொம்ப மாறி போச்சு தம்பி. இப்போ உங்களையே ப்ரொஜெக்ட்ல மதிக்கலைன்னு வெச்சுக்கோங்க, நீங்க அந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போவீங்க தானே. அதையே தான் பெத்தவங்களும் காதலை பொறுத்த வரை செய்யுறாங்க. ஆனா அது மட்டும் பசங்களுக்கு புடிக்காது. எதுவும் குழப்பமா இருந்தா முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி வீட்டுல இருக்கிற பெரியவங்க கிட்டே கேளுங்க..அவங்களும் அனுபவிச்சு வந்தவங்க தானே தம்பி என்றார். சார் எனக்கு ஒரு குழப்பமும் இல்லை என்றேன்.

இப்போது ரயில் பாலூர் தாண்டி சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பழைய சீவரம் வந்து விடும். அவர் பாரிமுனையில் இருக்கும் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்ப்பதாகவும், தனக்கு என் வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் சொன்னார். தினமும் இதே ரயிலில் தான் பழைய சீவரத்தில் இருந்து சென்று வருவதாகவும் சொன்னார். அவர் எழுந்து பேப்பரை மடித்து பையில் வைத்தார். பழைய சீவரத்தில் இறங்கி பெருமாள் கோவிலை நோக்கி நடந்தார். மணி ஒன்பது அரை ஆகியிருந்தது.

நான் என்னோட போனை எடுத்து நண்பனுக்கு டயல் செய்தேன். அதற்குள் தூங்கி விட்டிருந்தான். அவன் போனை எடுத்ததும் அனுபவம் பேசுமா டா? என்றேன். டேய்...போன வாரம் உன் முதல் செல்போன் நம்பர் நியாபகம் இருக்கானு கேக்குறே..இப்போ அனுபவம் பேசுமான்னு கேக்குறே...என்னடா ஆச்சு உனக்கு?..என்றான்..நான் மறுபடி ட்டேன்...அனுபவம் பேசுமா?...பேசும் என்றான். என் முன்னாடி இப்போ தான்டா சம்மணம் போட்டு உட்கார்ந்து பேசிட்டு போகுது என்றேன். அவன் போனை கட் செய்துவிட்டிருந்தான்.