Sunday, January 10, 2010

கோபமாய் ஒரு வெயில் காலம்...

அவள் ஒவ்வொரு ஆண்டு விடுமுறையிலும் ஏப்ரல் மாத முடிவில் என்னுடைய ஊரில் இருக்கும் அவள் அத்தை வீட்டிற்கு வந்து விடுவாள். மே மாத இறுதி வரை அவளிருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு திருவிழா தான். இருவருமே அப்போது தான் பதின் வயதை கடந்திருந்தோம். நான் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுகளில் இருந்து செஸ், கேரம், சீட்டு, கிரிக்கெட் என்று ஆடத்துவங்கிய காலம். அவளும் கிரிக்கெட் தவிர்த்து நான் சொல்லிய அனைத்தும் தெரிந்தவள். சென்னையில் இருப்பதால் அவளுக்கு இம்மாதிரி விளையாட்டுகள் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்று சொல்லுவாள். எப்போது செஸ், கேரம், சீட்டு விளையாடினாலும் அவளே ஜெயிப்பது போல தான் வரும். சீட்டை தவிர மற்ற விளையாட்டுகளில் அவளை ஒரு முறை கூட நான் ஜெயித்ததாக என் நினைவில் இல்லை.

வெயில்காலம் வந்ததுமே கிரிக்கெட் பேட் அம்மாவால் பரண் ஏற்றப்படும். மொத்தம் இருக்கும் ஐந்நூறு சதுர அடி வீட்டுக்குள் ஒவ்வொரு வருடமும் நான் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்து அலைய விடுவாள். வெயில் காலத்தில் நான் வெளியே செல்லாமல் இருப்பது என்றால் அது தாயம் விளையாடும் போது மட்டும் தான். ஒன்று - அதில் எனக்கு கொஞ்சம் கை ராசி உண்டு. நான் தாயக்கட்டை உருட்டினால் குறைந்தது ஐந்து, ஆறு முறை உருட்டும்படி எண்கள் விழும். இன்னொன்று அவளுக்கு தாயம் சரியாக விளையாட தெரியாது. கூட்டாக விளையாடினாலும் சரி, தனியாக விளையாடினாலும் சரி நானும் அவளும் எப்போதுமே எதிர் அணி தான். எங்களை மோத விட்டு விட்டு மற்றவர்கள் சீக்கிரம் தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொள்வார்கள். அன்று தாயத்தில் ஆரம்பித்து தான் கோபத்தில் முடிந்தது.

வழக்கம் போல அவளது ஆட்டக்காய்களை வெட்டுவதில் மட்டுமே நான் குறியாக இருந்தேன். மற்றவர்களும் அதற்கேற்ப தூபம் போட்டு என்னை உசுப்பேத்தி விடுவதிலும், அவர்கள் ஆட்டக்காய்கள் வெட்டு போகாமலும் பார்த்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அவள் தன்னுடைய ஆட்டக்காய் ஒன்றை வெட்ட வேண்டாம் என்று சொல்லியும் வெட்டியதில் தான் பிரச்சினை வந்தது. அவள் ஆட்டக்காயை வெட்டிவிட்டு ஏதாவது கொறிக்க கொண்டு வரலாம் என்று சென்றேன். பக்கத்திலேயே வெயிலில் பாட்டி உலர்த்தி இருந்த உப்பு மாங்காயும், அரிசி வடாமும், அட நாம ரொம்ப கொடுத்து வெச்சிருக்கோம் என்று தோன்றியது. நான் சென்று வருவதற்குள் அவளுடைய ஆட்டக்காய்கள் அனைத்தும் வெட்டப்பட்டிருந்தன. அவள் முகம் சுருங்கி போய் இருந்தது. என்னை பார்த்ததும் நான் ஆட்டத்துக்கு வரலை போ என்று எழுந்து சென்றாள். நான் விடுவேனா? என் பங்குக்கு ஏதோ சொல்ல, அவள் கோபித்துக் கொண்டு போய்விட்டாள். ஒட்டிக்கொண்டிருக்கும் ஈர அரிசியை உலர்த்தி போகும் வெயிலை போல, எங்கள் இருவருக்கும் மற்றவர் மேல் இருந்த கோபம், நாங்கள் உணரும் முன்பே எங்களை பிரித்து சென்றது.

அடுத்தடுத்த ஆண்டுகள் அவள் விடுமுறைக்கு வந்த போதும் சற்றும் கோபம் குறையாமல் இருந்தாள். நானும் கோபமாய் இருப்பது போல காட்டிக் கொண்டேன். இதெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த சித்திரை திருவிழாவின் போது அவள் அத்தையை தற்செயலாய் பார்க்க நேர்ந்தது. விட்டுப்போன வருடங்களின் உறவை எல்லாம் புதுப்பிப்பது போல பேசிக்கொண்டே சென்றாள். பின் பேச்சு எதேச்சையாய் அவள் பக்கம் திரும்பியது. இன்னமும் கூட அவள் தாயம் விளையாடுவதில்லை என்று அவள் அத்தை சொல்லி சிரித்த போது, என்னால் சிரிக்க முடியவில்லை.

ஒன்றுமற்ற விஷயத்திற்கு ஏன் கோபம் கொண்டோம்? அது சரியல்ல என்று ஏன் தோன்றவேயில்லை? இன்னமும் ஏன் அவளிடம் பேசாமல் இருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உரிமை இருக்கும் இடத்தில் தான் கோபம் கொள்ள முடியும் என்று தெளிவு வந்தது. இருந்தாலும் இன்னமும் அவளை பார்த்தால் கோபமாக இருப்பதாகவே காட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவள் மீது கோபம் இல்லாதது போல் காட்டிவிட்டால், அவள் மீதான உரிமை இல்லை என்று ஆகிவிடுமோ என்ற அபத்த எண்ணம், பாழும் மனதின் கடை கோடியில் இன்னமும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இருவருக்குமே போனால் போகட்டும் விடு என்ற எண்ணம் இதுநாள் வரை தோன்றவே இல்லை என்பது ஆச்சரியமாய் இருந்தது.

வெயில் காலத்தில் தார் சாலைகளில் தோன்றும் கானல் நீரை போல, கோபம் இருப்பது போலவும் இல்லாதது போலவும் இருக்கிறது என்று தோன்றியது. பெஞ்சமின் பிராங்களின் சொன்னது போல "கோபம் ஒரு போதும் காரணம் இல்லாமல் வருவதில்லை. ஆனால் எப்போதாவது மட்டுமே தகுதியான காரணத்திற்கு வரும்". காரணமில்லாமலே கோபத்தை தொடர்வதில் எந்த பயனுமில்லை என்பது வெயில் உறைப்பது போல புரிய ஆரம்பித்தது. இருந்தாலும் அவள் மீதான என்னுடைய உரிமையை நான் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. மறுபடி கத்தரி வெயில் சூரியனை போல தலைமேல் ஏறிக்கொண்டு என்னைப் பார்த்து சிரித்தது கோபம்.

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Complementleaders said...

அருமை! இன்னமுமாவது கோபம் தணிந்ததா? ;)

வலைப்பூக்கள் நவீன காலத்து டைரி..